அலகாபாத் கோட்டை
அலகாபாத் கோட்டை (ஆங்கிலம்; Allahabad Fort இந்தி: इलाहाबाद क़िला, உருது: الہ آباد قلعہ ) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையகும். 1583 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசர் அக்பரால் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. யமுனா நதி கங்கையுடன் கலக்கும் சங்கமத்திற்கு அருகில் யமுனா ஆற்றின் கரையில் இக்கோட்டை அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக இக்கோட்டையை இந்திய தொல்லியல் ஆய்வகம் அங்கீகரித்துள்ளது.[1]
மொகலாயப் பேரரசர் அக்பர் 1580 களில் அலகாபாத் கோட்டையை கட்டினார் என்பதை அபுல் ஃபசல் தன்னுடைய அக்பர்நாமா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.:[2]
கங்கையும் யமுனையும் இணைகின்ற இடமான் பியாக் (பிரயாக்) நகரை மிகப்பெரிய நகரமாக நிர்மாணிப்பது அக்பரின் நீண்ட கால ஆசையாக இருந்தது. ஆன்மீகத் துறவிகள் இவ்வூரை புனிதப் பயணம் மேற்கொள்தற்கான இடமாகவும் இந்திய குடிமக்கள் மிகவும் மரியாதைக்குரிய இடமாகவும் கருதினர். எனவேதான் கோட்டையை கட்டவேண்டும் என்பதற்காக இவ்விடம் தேர்வானது.
– அபுல்ஃபசல், அக்பர்நாமா
அக்பர் இக்கோட்டைக்கு இலகாபாசு (கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது) என்று பெயரிட்டார். இது பின்னர் அலகாபாத என்றானது[2]. அலகாபாத ஒரு புனிதத்தலம் என்பதைத் தவிர, திரிவேணி சங்கமத்திற்கு வருகைதரும் பக்தர்களிடமிருந்து ஏராளமாக வரி வசூலிக்கலாம் என்ற உந்துதலும் அக்பரின் மனதில் இருந்தது. எனினும், நடைமுறையில் இருந்த புனிதப் பயணங்களுக்கான வரிகளையும் 1563 ஆம் ஆண்டில் அவர் இரத்து செய்தார்.[3]
அக்பருடைய கோட்டையானது பிரபலமான அட்சயவத் மரத்தை (அழிவில்லாத ஆலமரம்) உள்ளாடக்கி கட்டப்பட்டது. இம்மரம் கோட்டையின் தெற்கு சுவரருகில் மரங்களுடன் மரமாக இருக்கிறது. கோட்டைக்கு வெளியில் இருந்துதான் இதைக் காணமுடியும். பொதுமக்கள் கோட்டைக்குள் வந்து இதைப்பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இப்புனித மரத்தில் தற்கொலை செய்து கொண்டால் முக்தி அடையலாம் என்று மக்கள் நம்பினர். மக்களை காப்பாற்றுவதற்காகவும் ஒருவேளை அக்பர் இவ்வாறு மரத்தை உள்ளடக்கி கோட்டையைக் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அக்பர் அவருடைய முற்பிறவியில் முகுந்த பிரமச்சாரி என்ற ஓர் இந்துவாக இருந்தார் என்று உள்நாட்டு நாட்டுப்புறக் கதையில் கூறப்படுகிறது. முற்பிறவியில் அவர் ஒரு முறை பால் அருந்திய பொழுது தெரியாமல் புனித விலங்கான பசுவின் முடியையும் சேர்ந்து அருந்தியதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டராம். அதற்காகத்தான் இப்பிறவியில் ஓர் இந்து அல்லாத மிலேச்சனாக ( இந்துமதம் சாராதவன்) படைக்கப்பட்டார் என்றும் அதற்குப் பரிகாரமாகவே அக்பர் இக்கோட்டையைக் கட்டினார் என்று அப்புராணக்கதையில் சொல்லப்பட்டு வருகிறது.[3]
அக்பரால் கட்டப்பட்ட கோட்டைகளில் மிகவும் பெரிய கோட்டை அலகாபாத் கோட்டையாகும். இக்கோட்டையின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் கலைநயம் வேறு எக்கோட்டையுடனும் ஒப்பிட முடியாத சிறப்புகளுடன் இருந்தது. இந்த பெரிய கோட்டையில் உயர் கோபுரங்கள் புடைசூழ மூன்று காட்சியகங்கள் உள்ளன.
முகலாயர்களுக்குப் பின்னர்
[தொகு]1798 ஆம் ஆண்டு அலகாபாத் கோட்டையை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது.[4]
தற்சமயம் இக்கோட்டை இராணுவம் பயன்படுத்தி வருகிறது. மிகச்சிறிய பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்படுகிறது. வெளிப்புற சுவர் நீர் மட்டத்தை விட உயரமாக இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் செனானா எனப்படும் மரியம் உசு சமானி அரசியின் அந்தப்புறம், கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் தூண் [5] போன்றவை இடம்பெற்றுள்ளன. சரசுவதி ஆறு புனித நதிகளுடன் கலக்குமிடம் மற்றும் பாடல்புரி கோயில் முதலியனவும் கோட்டைக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
அலகாபாத் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து கோட்டைக்குள் ஒரு தொடர் வண்டிப் பாதை வருகிறது. இப்பாதை போர் காலங்களில் பயன்படுத்திக் கொள்வதற்காக கிழக்கிந்திய நிறுவனம் அமைத்தது ஆகும்.
புற இணைப்புகள்
[தொகு]- Ashoka Pillar at Allahanbad Fort, British Library பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List of Monuments - Uttar Pradesh". Archaeological Survey of India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
- ↑ 2.0 2.1 William R. Pinch (17 March 2006). Warrior Ascetics and Indian Empires. Cambridge University Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85168-8.
- ↑ 3.0 3.1 Kama Maclean (28 August 2008). Pilgrimage and Power: The Kumbh Mela in Allahabad, 1765-1954. OUP USA. p. 62-69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533894-2.
- ↑ Bhattacherje, S. B. (May 1, 2009). Encyclopaedia of Indian Events & Dates. Sterling Publishers Pvt. Ltd. pp. A-110. பார்க்கப்பட்ட நாள் March 24, 2014.
- ↑ Ashoka Pillar at Allahabad Fort பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் British Library.