உள்ளடக்கத்துக்குச் செல்

எபேசஸ்

ஆள்கூறுகள்: 37°56′23″N 27°20′27″E / 37.93972°N 27.34083°E / 37.93972; 27.34083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்சஸ் நூலகம், எபேசஸ்

எபேசஸ் (எபேசு) (Ephesus) என்பது துருக்கி நாட்டில் சின்ன ஆசியாவின் (Asia Minor) மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்று "செல்சுக்" (Selçuk) என்னும் பெயர்தாங்கியுள்ள இந்த நகரத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இது ஒரு நகரமாக உருவெடுத்தது ஏறக்குறைய கி.மு.5 ஆம் நூற்றாண்டில் என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு நகரமாக இருந்தது. பின் இந்த நகரம் உரோமைப் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான வணிக நகரமாக விளங்கியது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் இங்கே கலையம்சம் மிக்க கோவில்களும் பொதுக் கட்டிடங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பகுதி சேதம் அடைந்து தற்போது ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே காணக்கிடைகின்றன. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக காட்சியளிக்கும் அகஸ்டஸ் நுழைவாயில், செல்சஸ் நூலகம், ஏட்ரியன் மதிற்சுவர் மற்றும் கோவில் போன்றவை எபேசு நகரின் புராதன கிரேக்க கட்டிடக்கலைக்கு முக்கிய சான்றுகள் ஆகும்.

எபேசு நகரமும் கிறித்தவமும்

[தொகு]

கிறித்தவ சமயத்திற்கும் எபேசு நகரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.

இயேசுவின் தாய் மரியா எபேசு நகரில் வாழ்ந்த வீடு இது என்று கருதப்படுகிறது

கி.பி. சுமார் 50ஆம் ஆண்டிலிருந்து எபேசு நகரம் கிறித்தவ சமயத்தோடு தொடர்புடையதாயிற்று. கி.பி. 52-54 ஆண்டுகளில் புனித பவுல் இந்த நகரில் வாழ்ந்து, கிறித்தவ நற்செய்தியை அறிவித்து பலரை கிறித்தவ சமயத்திற்குக் கொணர்ந்து, சபைகளை நிறுவினார்.[1]புதிய ஏற்பாட்டு பகுதியாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூலில் வரும் செய்திப்படி (காண்க: திப 19:23-41) தெமேத்தெரியு என்பவர் எபேசு நகரில் புகழ்பெற்ற அர்த்தமி (ArtemisDiana) என்னும் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த கோவிலின் படிமங்களைச் செய்து விற்று பணம் ஈட்டிவந்தார். எபேசு நகரில் பவுல் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அதே நேரத்தில் கடவுள் மனிதர் கைகளால் செய்த உருவங்கள் கடவுள் அல்ல என்று கூறிவருவதாக தெமேத்தெரியு குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, மக்களிடையே கலகம் உருவாயிற்று.

புனித பவுல் கி.பி. 53-57 ஆண்டளவில் எபேசு நகரிலிருந்து எழுதிய ஒரு மடல் புதிய ஏற்பாட்டில் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய எபேசு நகரின் துறைமுகத்திற்கு அருகே காணப்படும் "பவுல் கோபுரம்" (Paul tower) என்னுமிடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த போது அவர் மேற்கூறிய மடலை எழுதியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மேலும், பவுல் கி.பி. சுமார் 62இல் உரோமையில் சிறைப்பட்டிருந்தபோது அங்கிருந்து எபேசியருக்கு எழுதிய திருமுகம் என்னும் மடலை எழுதியிருப்பார்.

உரோமையர் காலத்து ஆசியாப் பகுதி, புதிய ஏற்பாட்டில் வருகின்ற இயேசுவின் திருத்தூதரான புனித யோவானோடு தொடர்புடையது.[2][3]புதிய ஏற்பாட்டு திருவெளிப்பாடு என்னும் நூலில் எபேசு திருச்சபை ஒரு முக்கிய கிறித்தவ சபையாக குறிப்பிடப்படுகிறது (காண்க: திவெ 2:1-7). எனவே, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே எபேசு நகரம் ஒரு முக்கிய கிறித்தவ மையமாக விளங்கியது தெரிகிறது.

அன்னை மரியாவின் வீடு

[தொகு]

இயேசுவின் தாயாகிய அன்னை மரியா எபேசு நகரில் தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளைக் கழித்திருக்கலாம் என்றொரு புனைவு கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுந்தது. இதற்கு ஆதாரமாக, எபேசியர்கள் தங்கள் நகரில் இயேசுவின் சீடரான புனித யோவான் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டி, அந்த யோவானின் கைகளில் அன்னை மரியாவை இயேசு சிலுவையில் தொங்கும்போது ஒப்படைத்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, எனவே மரியாவும் யோவானோடு எபேசு வந்து அவருடைய பாதுகாப்பில் தம் இறுதி நாட்களைக் கழித்தார் என்றும், எபேசிலேயே இறந்தார் என்றும் புனைந்து உரைத்தார்கள். 19ஆம் நூற்றாண்டிலிருந்து எபேசிலிருந்து 7 கி.மீ. தொலையில் உள்ள ஒரு வீடு பண்டை நாளில் மரியா வாழ்ந்த வீடாகக் காட்டப்படுகிறது. ஆன் கேதரின் எம்மெரிக் (Anne Catherine Emmerich) என்னும் கிறித்தவ துறவி தாம் கண்ட காட்சியில் அன்னை மரியாவின் வீடு பற்றி செய்தி அறிந்ததாக எழுதியுள்ளார். இன்று, அந்த வீடு திருப்பயணியர் சந்திக்கும் புகழ்பெற்ற தலமாக மாறியுள்ளது.

எபேசில் நிகழ்ந்த பொதுச்சங்கம்

[தொகு]

துறைமுகத்திற்கு அருகே உள்ள அன்னை மரியா கோவிலில் புகழ்பெற்ற ஒரு திருச்சபைப் பொதுச்சங்கம் கி.பி. 431இல் நிகழ்ந்தது. அது எபேசு பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகின்றது. கத்தோலிக்க சமயத் தலைவர்கள் கூடிவந்து பங்கேற்ற அந்த சங்கத்தின்போது, மரியா கடவுளும் மனிதருமான இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார் என்னும் கொள்கை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இரு "ஆள்கள்" உண்டு என்னும் நெஸ்தோரியக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Paul, St." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
  2. Will Durant, Caesar and Christ, New York: Simon and Schuster, 1972
  3. Stephen L Harris, Understanding the Bible, Palo Alto: Mayfield, 1985, "The Gospels" p. 266-268

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ephesus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபேசஸ்&oldid=3905165" இலிருந்து மீள்விக்கப்பட்டது