பார்த்ததில் மிகவும் ரசித்தது : 100.
அடுப்பில் கருகும் கீரையை பொருட்படுத்தாமல் வார பத்திரிக்கையில் சிறுகதையின் கடைசி பத்தியை கண்ணில் நீர் மல்க படித்த நம் போன தலைமுறை இல்லத்தரசிகளை திரையில் பார்த்ததுண்டா...
தன் கணவன் இறந்ததையறிந்து அதிர்ச்சியில் தன் இரண்டு கால்கள் செயலிழந்த தாய். இத்தனை காலம் தன் மகனின் தயவால் மட்டுமே குளிக்கக்கூட வேண்டிய சூழல். அலமாரியில் அவன் துணிகளுக்கிடையே XXX புத்தகத்தை கண்ட தாய். அடுத்த நாள் தனக்கு நீர் விலாவி குளிப்பாட்ட தொட நெருங்குவனை எதிர்கொள்ளும் தாயின் மனநிலையை இதற்கு முன் திரையில் பார்த்ததுண்டா...
அதிகாலை அடிக்கும் அலாரத்தை snooze மோடுக்கு மாற்றும் ஆவலை கட்டுப்படுத்தி, எழுந்தால் மட்டுமே தனது ஊனமுற்ற தாய் மற்றும் தனக்கான தினதேவைகளை பூர்த்தி செய்ய இயலும் கட்டாயத்தில் சலுப்புடன் எழுந்தாலும் அயர்ந்து குறட்டை ஒலியுடன் உறங்கும் தாயை பார்த்து இன்புறும் பத்து வயது சிறுவன் பாத்திரம்.
தனது நடக்க இயலாத தாய்க்கு ஆட்டாேமேடிக் சக்கர நாற்காலி வாங்கும் தனது ஆவலை நோக்கின அவனது பயணமே இப்படம். அவனது வயதுக்கு மீறிய பக்குவம் + உழைப்பால் அவன் சம்பாதித்ததும். தன் வயதிற்கே உரிய குறும்பு + சேட்டையால் அவன் இழக்க நேரிட்டதுமே இந்த கதை.
எடுத்து சொல்லவும், ஆச்சர்யமா விவரிக்கவும், சிலாகிச்சு பேசவும், கண்ணில் தேங்கிய நீருடன் உதட்டில் புன்னகை பூக்கவும் செய்யும் பல பாத்திரங்களும், காட்சிகளும் உள்ளடக்கிய திரைப்படம்.